Saturday, 19 November 2011

இலவசங்களும் விலையேற்றமும்.

விழி பிதுங்கும் விலைவாசி உயர்வினால், வாழ வக்கற்று, வேறு வழியின்றி வறுமையில் உழன்று ஏற்கனவே வதைபட்டுக் கொண்டிருக்கும் சாதாரண பொது மக்களின் மீது திடீரென்று விழுந்த இடியாக, பால் விலை, பேருந்துக் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியன பன்மடங்கு உயர்த்தப்பட்டு அவர்களின்  கூன்முதுகு மேலும் நிமிர முடியாத அளவிற்கு வளைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு 18.11.2011  நள்ளிரவு முதல் திடீர் காட்டாற்று வெள்ளமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சீறிப் பாயும் காட்டாற்று  வெள்ளத்தில்  சிக்குண்டு அவதிப்படுபவர்களும் பொது மக்கள் தானே! அவர்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்படும் விலையில்லாத மிக்சி, கிரைண்டர், 20 கிலோ அரிசி, மடிக்கணினி, ஆடு மாடுகள் முதலியவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூட மக்கள் இருக்க மாட்டார்களே! 
தமிழக அரசின் பால் விலை மற்றும் பேருந்துக் கட்டண உயர்வின் நியாயத்தை உணர்ந்து கொண்டாலும் இந்த விலை உயர்வை, அரசை அரியணையில் ஏற்றிய சாதாரண பொது மக்களின் வாழ்க்கை தரத்தின் நிலையைப் புரிந்துகொண்டு அரசே தாங்கிக் கொள்ள வேண்டும். 

இலவசங்களை அளித்து, மக்களை உழைப்பில்லாத சமுதாயமாக மாற்றுவதற்குப் பதிலாக அத்யாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் அதனை அரசே தாங்கிக் கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தானே மாண்புள்ள மக்கள் அரசாக இருக்க முடியும். தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு செலுத்தக் கூடிய நன்றிக் கடனாகவும் இருக்கக் கூடும். 

தொடர்ந்து இலவசங்களை அளித்துக் கொண்டிருக்கும் அரசால் இதனை நிச்சயமாகச் செய்ய முடியாது. மேலும் இலவசங்களைப் பெறுபவர்கள் அதற்காக அரசுக்குத் திருப்பித் தரப்படும் விலை என்றுதான் இந்தக் கட்டண உயர்வைக் கொள்ள வேண்டும். 

இலவசங்களை மனமுவந்து பெற்றுக் கொள்பவர்களுக்கு விலைவாசி உயர்வு கூடாது என்று கேட்பதற்குக்  கூட எந்த விதமான உரிமையும் கிடையாது என்பதையும் உணரவேண்டும். 

அரசும் மக்களும் சிந்திக்க வேண்டும். அரசு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மக்கள் இலவசங்களை மறுக்க வேண்டும்.  

-பி.குருசாமி